
பெங்களூரு, நவ. 19-
கிரிநகர் குள்ளண்ண குட்டா ஆளரவமற்ற பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்ட வழக்கில், படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாதாராயணபுரத்தைச் சேர்ந்த சாகி முகமது (38) என்பவரே உயிரிழந்தவர் ஆவார். நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் மர்ம நபர்கள் இவரது கை, கால்களைக் கட்டி, முகத்தையும் துணியால் கட்டிவிட்டு உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளனர். தீயில் இருந்து தப்பிக்க முயன்றபோது அவர் ஈரண்ணகுட்டா குன்றில் இருந்து கீழே விழுந்ததில் நெஞ்சுப் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடலில் 60 முதல் 70 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டதால், உடனடியாக விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த சாகி முகமது கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதிகளில் குப்பை, காகிதம் பொறுக்கிப் பிழைப்பு நடத்தி வந்ததும், இவரது குடும்பத்தினர் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக சம்பவம் நடந்த நாளன்று தெற்கு மண்டல டி.சி.பி. கே. வம்சிகிருஷ்ணா கூறுகையில், தீப்பிடித்த நிலையில் குன்றில் இருந்து கீழே ஓடி வந்தபோது நெஞ்சுப் பகுதியிலும் தீ பரவி நிலைமை கவலைக்கிடமானதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறியிருந்தார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார், எதற்காக இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













