
புதுடெல்லி, நவ. 29-
பெண்களுக்கு பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நோக்கத்துடன் மத்திய அரசு முக்கியத்துவம் வாய்ந்த மூன்று மசோதாக்களை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஆயத்தமாகி வருகிறது. நாளை தொடங்கவுள்ள பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரில் அரசியல் சாசனத்தின் 132-வது திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்களை மக்களவையில் விவாதித்து நிறைவேற்றுவதற்காக தாக்கல் செய்ய நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு கூட்டத்தொடரில் மூன்று மசோதாக்கள் குறித்து ஆளுங்கட்சி-எதிர்க்கட்சிகள் இடையே அனல் பறக்கும் விவாதம், மோதலுக்கு களம் அமையும். இந்த மசோதாக்கள் அமலுக்கு வந்தால் மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது உள்ள 543-ல் இருந்து 816 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், 2029-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இருந்து பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நோக்கத்தை அரசு கொண்டுள்ளது. நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்களவை தொகுதிகளை 50 சதவீதம் அதிகரிக்கும் பரிந்துரையும் இந்த சட்ட வரைவின் முக்கிய பகுதியாக உள்ளது. மூன்று முக்கிய மசோதாக்கள் எவை? அரசியல் சாசன (132-வது திருத்தம்) மசோதா, 2026: மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் சட்டசபையை கொண்டுள்ள யூனியன் பிரதேசங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த தேவையான அரசியல் சாசன மாற்றங்களை கொண்டு வருவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும். சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் இதை தாக்கல் செய்ய உள்ளார். தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா, 2026: மக்களவை மற்றும் சட்டசபைகளின் தொகுதிகள் மறுவரையறை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொகுதிகளை மறுபங்கீடு செய்தல் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை அடையாளம் காணும் நடைமுறைக்கு இந்த மசோதா வழிவகை செய்யும். இதன்படி தொகுதி மறுவரையறை ஆணையத்தை அமைத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பின் சமீபத்திய புள்ளி விவரங்களின் அடிப்படையில் தொகுதிகளின் எல்லைகளை மறுநிர்ணயம் செய்யும் பரிந்துரை உள்ளது. பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை ஆணையம் தீர்மானிக்கும் வகையில் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் அம்சமும் மசோதாவில் உள்ளது. யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2026: டெல்லி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரியில் மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்த ஏதுவாக மூன்று சட்டங்களில் திருத்தம் கொண்டு வர இந்த மசோதா உத்தேசித்துள்ளது. 1963-ம் ஆண்டின் யூனியன் பிரதேசங்கள் சட்டம், 1991-ம் ஆண்டின் டெல்லி தேசிய தலைநகர் பிரதேச சட்டம் மற்றும் 2019-ம் ஆண்டின் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை உள்துறை மந்திரி அமித் ஷா தாக்கல் செய்ய உள்ளார். பழைய மசோதாவை வாபஸ் பெற்று புதிய மசோதா: மத்திய அரசு இதே ஆண்டின் ஏப்ரல் 16-ந் தேதி மக்களவையில் தாக்கல் செய்திருந்த மூல தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்ட திருத்த மசோதாக்களை வாபஸ் பெற உள்ளது. அவற்றுக்கு பதிலாக திருத்தப்பட்ட இரண்டாவது மசோதாக்களை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதிகள் மறுவரையறை தொடர்பான அம்சங்களை முழுமையாக அமல்படுத்தும் நோக்கத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூன்று மசோதாக்களையும் ஒரே கட்டத்தில் பரிசீலித்து நிறைவேற்ற ஏதுவாக மக்களவையின் விதி 66-ன் கீழ் சில நடைமுறை விதிகளின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கும் தீர்மானத்தையும் சட்ட மந்திரி தாக்கல் செய்ய உள்ளார். தொகுதி மறுவரையறை பரிந்துரை அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொகுதிகள் மறுபங்கீடு செய்வதால் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பியுள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த பரிந்துரையின் விளைவுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இதே வேளையில், தி.மு.க. மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார் அணி) ஆகியவை தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்த பிறகு கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேற மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியமாகும். மேலும், அரசியல் சாசனத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குறைந்தபட்சம் பாதி அளவிலான மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலும் அவசியமாகலாம். நவம்பர் 30-ந் தேதி முதல் டிசம்பர் 3-ந் தேதி வரை மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளதுடன், டிசம்பர் 2-ந் தேதி முதல் மாநிலங்களவையின் அலுவல்கள் தொடங்க உள்ளன. மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மற்றும் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறித்து இந்த கூட்டத்தொடரில் முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















