
பீனிக்ஸ், நவ. 28- அமெரிக்காவின் சான் டியாகோ நகரிலிருந்து புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ‘ஃபிளைட் 1494’ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் திடீரென தனது இருக்கையிலிருந்து எழுந்து விமானத்தின் முன்பகுதிக்குச் சென்றார். அங்கு இருந்த அவசரகால வெளியேறும் கதவைத் திறக்க அவர் முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருக்கைக்குத் திரும்புமாறு விமான ஊழியர்கள் பலமுறை அறிவுறுத்தியபோதும், அந்தப் பயணி அவற்றைப் பொருட்படுத்தவில்லை. இதனால் ஆபத்தை உணர்ந்த விமானப் பணிப்பெண்களும், சக பயணிகளும் உடனடியாகச் செயல்பட்டனர். அவர்கள் அந்தப் பயணியுடன் போராடி, அவரைத் தரையில் அழுத்திப் பிடித்து கட்டுப்படுத்தினர். இதையடுத்து விமானம் பீனிக்ஸ் நகரில் உள்ள ஸ்கை ஹார்பர் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பயணியை விமானத்திலிருந்து இறக்கி அழைத்துச் சென்றனர். பின்னர் விமானம் மீண்டும் சிகாகோ ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றதாக அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பயணி உடனடியாகக் கைது செய்யப்படவில்லை. எனினும், சம்பவம் குறித்து அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கதவைத் திறக்க முயன்ற பயணியின் பெயர் மற்றும் அடையாள விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. சம்பவத்தை நேரில் பார்த்து, அதை வீடியோவாகப் பதிவு செய்த சக பயணி சீன் பென்னட், அந்தக் காணொலியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “யாரோ விமானத்தைக் கடத்த முயன்றார்கள். நாங்கள் பீனிக்ஸில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளோம். வலிமையான பல ‘ஹீரோக்கள்’ (சக பயணிகள்) அவரை மடக்கிப் பிடித்தனர். நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.















