Home செய்திகள் உலக செய்திகள் இருமுறை கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க கழுதை

இருமுறை கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க கழுதை

வாஷிங்டன், நவ. 26-
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த ‘ஹோப்’ என்ற பெண் கழுதை, உலகிலேயே மிக நீளமான வாலைக் கொண்ட கழுதை என்ற புதிய கின்னஸ் உலக சாதனையைப்
படைத்துள்ளது.
ஜார்ஜியா மாநிலம் பைரன் நகரில் அமைந்துள்ள ப்ராஸ்ட் பண்ணையில் இந்த சாதனை நிகழ்ந்தது. கடந்த செப்டம்பர் 11-ம் தேதி, கால்நடை மருத்துவர் குழுவினர் மற்றும் சுயாதீன சாட்சிகள் முன்னிலையில் ஹோப்பின் வால் அதிகாரப்பூர்வமாக அளவிடப்பட்டது. அப்போது, அதன் வால் 50.73 சென்டிமீட்டர், அதாவது 19.97 அங்குலம் நீளமுள்ளதாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சுமார் 2 மாத கால ஆய்வுக்குப் பிறகு, இந்த அளவீட்டை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. உலகிலேயே மிக நீளமான வாலைக் கொண்ட கழுதை என்ற சாதனை ஹோப்பின் பெயரில் பதிவாகியுள்ளது.
‘அமெரிக்கன் மம்மத் ஜாக்ஸ்டாக்’ இனத்தைச் சேர்ந்த ஹோப்புக்கு கின்னஸ் சாதனை படைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு, உலகிலேயே மிக நீளமான காதுகளைக் கொண்ட கழுதை என்ற சாதனையையும் ஹோப் பெற்றிருந்தது.கடந்த ஆகஸ்ட் மாதம் வேறொரு கழுதை அந்தச் சாதனையை முறியடித்தது. எனினும், நீளமான வால் கொண்ட கழுதை என்ற பிரிவில் தற்போது மீண்டும் கின்னஸ் உலக சாதனையை ஹோப் படைத்துள்ளது.