
மதுரை/தருமபுரி: நவ. 17-
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான யூடியூபர் நிஷாந்தை தருமபுரியில் போலீஸார் கைது செய்தனர். பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு ஆம்னி பேருந்தில் தப்பிச் சென்றபோது போலீஸாரிடம் நள்ளிரவில் சிக்கியுள்ளார்.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 12-ம் தேதி ரூ.21 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனது. போலீஸ் விசாரணையில், மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவைச் சேர்ந்த சுரேஷ் மகன் நிஷாந்த் (25), முகமூடி அணிந்து துணிகரமாக இந்த கொள்ளை சம்பவத்தை தனிநபராக அரங்கேற்றியது தெரிய
வந்தது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும், கொள்ளையனை பிடிக்கவும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதற் கட்ட விசாரணையில் நிஷாந்தின் தந்தை சுரேஷ், தோழியான மதுரை திருப்பாலையைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி (24) ஆகியோரை போலீஸார் கைது செய்திருந்தனர். இவர்களிடம் இருந்து 5 கிலோ நகைகளும், மாடக்குளம் மலையடிவாரத்தில் புதைத்து வைத்திருந்த 10 கிலோ நகைகளையும் போலீஸார் பறிமுதல் செய்து இருந்தனர்.
தலைமறைவான நிஷாந்தை திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸார் தேடி வந்தனர். அவரது புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், முகக்கவசம், தொப்பி அணிந்து அடையாளத்தை மறைத்தபடி அவர் சுற்றித் திரிந்துள்ளார். அவரது செல்போன் பயன்பாடு, இணையவழி பணப் பரிவர்த்தனைகளையும் போலீஸார் கண்காணித்து வந்தனர்.
இதில் நிஷாந்த் ஆம்னி பேருந்தில் திருப்பூர், தருமபுரி, ஓசூர் வழியாக பெங்களூரு சென்றது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்து சேலத்தை நோக்கி நேற்று முன்தினம் இரவு ஆம்னி பேருந்தில் வந்துள்ளார். அப்போது இவரை அடையாளம் கண்ட ஆம்னி பேருந்து ஓட்டுநர், தருமபுரி அதியமான் கோட்டை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.













