Home செய்திகள் தேசிய செய்திகள் நீட் மறுதேர்வு முடியும் வரை ‘டெலிகிராம்’ செயலிக்கு இந்தியாவில் தடை

நீட் மறுதேர்வு முடியும் வரை ‘டெலிகிராம்’ செயலிக்கு இந்தியாவில் தடை

புதுடெல்லி, ஜூன் 16- நீட் மறுதேர்வு வரும் ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தத் தேர்வு முடியும் வரையில் டெலிகிராம் மெசேஜிங் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இதை தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் மருத்​து​வம் மற்​றும் பல் மருத்​துவ படிப்பு மாணவர் சேர்க்​கைக்​காக நீட் (யுஜி) நுழைவுத்​தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகை​யில், நடப்பு கல்வி ஆண்டு சேர்க்கைக்​கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடந்​தது. வினாத்​தாள் கசிந்ததால் அத்​தேர்வு ரத்​து செய்​யப்​படு​வ​தாக​வும் நீட் மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடத்தப்​படும் என்றும் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறி​வித்​தது. நீட் வினாத்தாள் கசிவு விவாகரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. சமூக வலைதளம் மூலம் பிரபலமான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இச்சூழலில், இந்த தேர்வு முடியும் வரையில் டெலிகிராம் மெசேஜிங் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு தேசிய தேர்வு முகமை பரிந்துரைத்துள்ளது. அதன்படி மத்திய அரசு அந்த செயலிக்கு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசின் இந்த வழிகாட்டுதலை தேசிய தேர்வு முகமை வரவேற்கிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் பிரிவு 69ஏ-ன் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்தியாவில் ‘டெலிகிராம்’ அக்சஸ், நீட் மறுதேர்வு நடைபெற்று முடியும் வரை தடை செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு இந்தச் செயலியில் ஜூன் 30 வரை மெசேஜ் எடிட்டிங் அம்சத்தை தற்காலிமாக தடை செய்யுமாறும் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.டெலிகிராம்: கடந்த 2013-ல் அறிமுகமான மெசேஞ்சர் செயலிதான் டெலிகிராம். இதனை பாவெல் துரோவ் மற்றும் அவரது சகோதரர் நிகோலா துரோவ் இணைந்து தொடங்கினர். நிதி மற்றும் ஐடியாலஜி சார்ந்த பணியை பாவெலும், டெக்னிக்கல் சமாச்சாரங்களை நிகோலாவும் கவனித்துக் கொள்கின்றனர்.