
பாட்னா: ஜூன் 16-
நீட் மாணவர்களின் கட்டண தொகை மோசடி தொடர்பாக பிஹார் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் வினாத்தாள் முன் கூட்டியே கசிந்தது தெரியவந்ததால் நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. வரும் 21ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வுக்காக எஸ்சி, எஸ்டி மாணவர்கள் ரூ.1,000, ஓபிசி மாணவர்கள் ரூ.1,600, பொதுப் பிரிவினர் ரூ.1,700, வெளிநாட்டு மாணவர்கள் ரூ.9,500 கட்டணம் செலுத்தினர்.
இந்த கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் இதுதொடர்பாக வரும் 22ம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. இந்த சூழலில் பிஹாரின் கயா பகுதியைச் சேர்ந்த நவீன் யாதவ் (19), நீட் தேர்வர்களின் கட்டண தொகையை பெற நூதன மோசடியில் ஈடுபட்டு உள்ளார்.இதுதொடர்பாக அகமதாபாத் சைபர் குற்றப்பிரிவில் ஒரு மாணவர் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து நவீன் யாதவை கைது செய்து உள்ளனர்.
இது குறித்து அகமதாபாத் போலீஸார் கூறியதாவது: நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் மொபைல் போன் எண்களுக்கு நவீன் யாதவ் சமூக வலை தளம் மற்றும் எஸ்எம்எஸ் வாயிலாக தகவல்களை அனுப்பி உள்ளார். அதில், தன்னை என்டிஏ ஊழியர் என்றும் நீட் கட்டண தொகையை திரும்பப் பெற தன்னை தொடர்பு கொள்ளும்படியும் கூறியுள்ளார்.
இதை நம்பிய பலர், நவீன் யாதவை சமூக வலைதளம் வாயிலாக தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களிடம் நீட் தேர்வு பதிவெண் மற்றும் ஓடிபி உள்ளிட்ட விவரங்களைப் பெற்ற நவீன் தனது வங்கிக் கணக்குகளை இணைத்து என்டிஏ இணையம் வாயிலாக விண்ணப்பித்து உள்ளார்.
அகமதாபாத்தில் தங்கியிருந்து அவர் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுபோல பலரும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கட்டண தொகையை திரும்ப பெறும் விவகாரத்தில் நீட் தேர்வர்கள் மிகுந்த எச்சரிக் கையாக இருக்க வேண்டும்.
யாருடனும் என்டிஏ பதிவெண் மற்றும் ஓடிபியை பகிர்ந்து கொள்ள வேண்டாம். இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான 3 பேரிடம் திகார் சிறையில் விசாரிக்க அனுமதி: நீட் வினாத்தாள் கசிவு குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திகார் சிறையில் அடைக்கப்பட் டுள்ள மணீஷா வாக்மாரே, தனஞ்செய் நிவ்ருத்தி லோகாண்டே, சுபம் மதுக்கர் கயர்னர் ஆகிய மூவரிடமும் விசாரணை நடத்தக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்தர் மோகித் சிங் விசாரித்தார். அப்போது திகார் சிறையில் வைத்து ஜூன் 17, 18, 19 ஆகிய தேதிகளில் 3 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கினார்.


















