
சென்னை: அக். 23-
சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனிதர்களுக்கும் இந்நோய் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால்,
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால் வண்டலூர் பூங்கா 2 நாட்கள் மூடப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதை கால்நடைத் துறையுடன் இணைந்து ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் அவ்வப்போது பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரியில் சென்னையில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டது. தொடர்ந்து, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், கால்நடைத் துறையுடன் இணைந்து நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் மனிதர்களுக்கு பெரிய அளவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது டெங்கு, புளூ உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவி வருகின்றன.இந்நிலையில், மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளதால், நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகளை வெறும் கைகளால் எடுத்து அகற்றக் கூடாது. அதிக காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டைப் புண், உடல் சோர்வு, தசை வலி, மூட்டு வலி, மூச்சுத்திணறல், சுவாசப் பிரச்சினை ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். பெரும்பாலான காய்ச்சல்களுக்கும் இதே அறிகுறிகள் இருப்பதால், மருத்துவரிடம் ஆலோசித்து மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.















