
புதுடெல்லி, அக். 8- இந்தியப் பள்ளிகளில் மாணவிகளுக்கான தனிக் கழிப்பறை வசதி 95 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் கண்ணியமான பள்ளிச் சூழலுக்கு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, மாதவிடாய் காலங்களில் கழிப்பறை வசதியின்மையால் மாணவிகள் எதிர்கொண்ட சிரமங்கள் குறைந்துள்ளன. 2014 அக்டோபர் 2-ல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ‘ஸ்வச் பாரத் மிஷன்’ திட்டத்துடன், பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்குத் தனித்தனி கழிப்பறை வசதி ஏற்படுத்தும் ‘ஸ்வச் வித்யாலயா’ திட்டமும் செயல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, 2014-ல் பள்ளிகளில் இருந்த 67 சதவீத கழிப்பறை வசதி தற்போது 98 சதவீதமாக உயர்ந்துள்ளது. கழிப்பறை இல்லாத பள்ளிகளின் விகிதம் 27 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகக் குறைந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் கூட்டு கண்காணிப்பு தகவலின்படி, மாணவர்களுக்கான அடிப்படை குடிநீர் வசதி 2015-ல் 55 சதவீதமாக இருந்த நிலையில், 2025-ல் 97 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக சராசரியான 75 சதவீத கழிப்பறை வசதி, 80 சதவீத குடிநீர் வசதியைவிட இந்தியா முன்னிலையில் உள்ளது. மத்திய கல்வி அமைச்சகத் தகவலின்படி, 14.56 லட்சம் பள்ளிகளில் மாணவிகளுக்கான தனிக் கழிப்பறை வசதி 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2014-ல் 40 சதவீதமாக இருந்த செயல்பாட்டிலுள்ள கழிப்பறைகளின் விகிதம் தற்போது 92 சதவீதமாக உயர்ந்துள்ளது. UDISE+ தரவுகளின்படி, 9 முதல் 12-ம் வகுப்பு மாணவிகளின் இடைநிற்றல் 8.3 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.













