
புதுடெல்லி: ஆக. 27-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் ஸ்கர்டு ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக முப்படைகளின் முன்னாள் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்தாண்டு மே 7-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பல்வேறு தீவிரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் துல்லிய தாக்குதல்களை நடத்தினர். இந்தப் போர் மே 10 அன்று முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து முப்படைகளின் முன்னாள் தளபதி அனில் சவுகான் கூறியதாவது: மே 10-ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் இந்தியாவை அணுகியது. இந்தச் சமயத்தில்தான் பாகிஸ்தானின் சர்கோதா விமானப்படைத் தளத்தைத் தாக்குவதற்கு இந்திய விமானப்படை அனுமதி கோரியது.
“சர்கோதாவைத் தாக்கலாமா?” என்று விமானப்படைத் தளபதி என்னிடம் கேட்டார். நான், தாராளமாக தாக்குங்கள். மேலும் 2 இலக்குகளை அடையாளம் காணுங்கள் என்று கூறினேன். அவர் அடையாளம் காட்டிய இலக்குகளில் ஒன்று ஸ்கர்டு. நாங்கள் சம்மதம் தெரிவித்தோம், ஆனால் சிறிது நேரத்துக்குப் பிறகு, அங்கு வானிலை மோசமடைந்ததால், அவர்கள் போலாரிக்கு மாற வேண்டியிருந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.கில்ஜித்-பல்டிஸ்தானில், சிந்து நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்கர்டு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் லடாக்குக்கு அருகில் இருப்பதால் பாகிஸ்தானுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பாகிஸ்தான் விமானப்படையின் பிரதான செயல்பாட்டுத் தளமாக செயல்படும் இது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டு வரும் சீன உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பாதுகாப்பு மற்றும் தளவாட உதவிகளை வழங்கும் முக்கிய ராணுவ தளமாகவும் விளங்குகிறது.














