Home செய்திகள் தேசிய செய்திகள் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு இலவச வீடுகள்

பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு இலவச வீடுகள்

புதுடெல்லி, செப். 27-
முத்தலாக், நிக்காஹ் ஹலாலா உள்ளிட்ட நடைமுறைகளால் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்கு இலவச குடியிருப்புகளை வழங்க உத்தராகண்ட் அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் உத்தராகண்ட் வஃக்பு வாரியம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து வஃக்பு வாரியத் தலைவர் ஷதாப் ஷம்ஸ் கூறியதாவது: “முத்தலாக், ஹலாலா போன்ற நடைமுறைகளால் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இலவச வீடுகளை வழங்குவதற்கான திட்டத்தை வாரியம் உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரியத்துக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலம் தேவைப்படும் பெண்களுக்காகப் பயன்படுத்தப்படும்.
வாரிய நிலங்களில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். “அதன்பிறகு, மீட்கப்பட்ட நிலம் மற்றும் கட்டிடங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சகோதரிகளுக்குரிய உரிமைகள் உறுதி செய்யப்படும்” என்றார். பொதுவாக முஸ்லிம் சமூகத்தில் முத்தலாக் நடைமுறைக்குப் பிறகு கணவர்கள் மறுமணம் செய்து கொள்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனையை எதிர்கொள்வதுடன், ஆதரவற்ற நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
இத்திட்டம் அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கும் என பாஜக ஆளும் உத்தராகண்ட் அரசு எதிர்பார்க்கிறது. முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்ட பெண்களை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைப்பதும், அவர்களுக்கு பாதுகாப்பான இருப்பிடத்தை வழங்குவதும் இம்முயற்சியின் நோக்கமாகும். நாட்டிலேயே முதன்முறையாக உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு சட்டம் மூலம் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள முத்தலாக் முறையை, பொது சிவில் சட்டத்தின் மூலமும் மாநில அரசு தடை செய்துள்ளது.