
ராமேஸ்வரம்: செப்டம்பர் 5-
தனுஷ்கோடி கடற்கரையில் சீன எழுத்துகளுடன் கூடிய வாட்டர் பாக்கெட்டுகள் மிதந்து கரை ஒதுங்கியதைக் கண்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
தென்கடலில் சில மர்ம பொருட்கள் மிதந்து கரை ஒதுங்குவதை அப்பகுதி மீனவர்கள் கண்டுள்ளனர். நேற்று அதிகாலையில் மீன்பிடிப்பில் ஈடுபட்ட பாரம்பரிய மீனவர் ஒருவரின் வலையில்
இவ்வாறு சீன எழுத்துகள் அச்சிடப்பட்ட பாக்கெட்டுகள் சிக்கியது. பாக்கெட்டுகளை திறந்து பார்த்தபோது, அவற்றில் குடிநீர் நிரப்பப்பட்டிருந்தது.
மீனவர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, அதிகாரிகள் நூற்றுக்கணக்கான பிளாஸ்டிக் பாக்கெட்களை கைப்பற்றி சோதனை செய்தனர்.
அவற்றில் சீனாவின் அதிகாரப்பூர்வ பேக்கேஜிங் குடிநீருக்கான தரக்குறியீடு இருந்தது. இவை சீனாவில் தயாரிக்கப்பட்ட அவசர கால குடிநீர் பாக்கெட்கள் என்றும், கடல்சார் பாதுகாப்பு மற்றும் அவசர கால உபகரணங்களில் பயன்படுத்தப்படும் என்பதும் தெரியவந்துள்ளது.
புலனாய்வு பிரிவு போலீசார் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். காலாவதியான பிறகு இவை இலங்கை கடற்படை படகுகள் அல்லது சர்வதேச வணிக கப்பல்களில் இருந்து கடலில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடல் நீரோட்டம் மற்றும் அலைகளின் காரணமாக இவை இங்கு ஒதுங்கியிருக்க வாய்ப்பு உள்ளது.
இந்த பிளாஸ்டிக் வாட்டர் பாக்கெட்டுகள் கடலில் மிதப்பதால் கடல்வாழ் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை அகற்ற அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.














