
பெங்களூரு, செப். 27- ஏழை எளிய நோயாளிகளைக் குறிவைத்து மருந்து, மருத்துவ உபகரணங்களின் விலையை பல மடங்கு உயர்த்திய 254 மருந்து உற்பத்தி நிறுவனங்களின் பகீர் மோசடியை கர்நாடக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கண்டுபிடித்து அம்பலப்படுத்தியுள்ளது. மிகக் குறைந்த செலவில் மருந்துகளைத் தயாரித்து மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்த பிறகு, நோயாளிகளிடம் மட்டும் கட்டுப்படியாகாத மிக அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 254 நிறுவனங்களின் முழுப் பட்டியலையும் தயாரித்துள்ள எஃப்.டி.ஏ ஆணையர் கே.சீனிவாஸ், இந்த அநியாய விலை உயர்வை உடனடியாகக் கட்டுப்படுத்தக் கோரி மத்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்திற்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார். மருந்துகளின் உற்பத்தி அல்லது விநியோகச் செலவுக்கும், மருத்துவமனைகளில் விற்கப்படும் அதிகபட்ச சில்லறை விலைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. மாநிலத்தில் அதிக லாப வெறியில் மருந்துகளை விற்று வந்த 254 நிறுவனங்களின் விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாக எஃப்.டி.ஏ ஆணையர் தெரிவித்துள்ளார்.மருந்துகள் விலைக்கட்டுப்பாட்டு ஆணை 2013’-ன் கீழ் இந்த விலைகளை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் நிர்ணயிக்கும் அநியாய லாப வரம்பிற்கு (Trade Margin) உச்சவரம்பு விதிக்க வேண்டும். தயாரிப்புச் செலவுக்கு ஏற்ப நியாயமான விலையை நிர்ணயித்து, ஏழை நோயாளிகளின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.













