
சென்னை, செப். 27-
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி அறிவிக்காவிட்டால், அக்.31-ம் தேதிக்குப் பிறகு வலிமையான, தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் செப்.26-ம் தேதி கோட்டை நோக்கி பேரணி செல்லும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து,
செப்.25-ம் தேதி போக்குவரத்து ஆணையர் மற்றும் அதிகாரிகள், ஆட்டோ தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது, தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும், போராட்டத்தை கைவிடுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதன் அடிப்படையில், கோட்டை நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு ஒத்திவைத்துள்ளது. இதனிடையே, எஃப்சி (FC) சான்றிதழ் பெறுவதற்காக செல்லும் ஆட்டோக்களில் ரிப்லெக்டர் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான நடைமுறையிலும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது குறிப்பிட்ட நபரிடம் மட்டுமே ரிப்லெக்டர் ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இதனைத் தளர்த்தி, தரமான ரிப்லெக்டர் ஸ்டிக்கர்களை ஆட்டோ உரிமையாளர்கள் எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக்கொண்டு எஃப்சிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
















