
புதுடெல்லி: ஜூன் 29-
ஒருவர் இந்தியர் என்பதற்கும், குடியுரிமையை நிரூபிப்பதற்கும் எந்தவிதமான ஆவணங்கள் தேவை, எந்த ஆவணங்கள் செல்லாது என்பதில் நாளுக்கு நாள் குழப்பம் கூடி வருகிறது.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதன் மூலம் இந்தியக் குடியுரிமை வைத்திருப்பவர் என்று கூற இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்த வெளியுறவுத் துறையின் விளக்கம், குழப்பத்தை இன்னும் வலுப்படுத்தியுள்ளது. அப்படியென்றால், இந்தியக் குடியுரிமையை நீரூபிக்க சட்டப்பூர்வ ஆதாரம் எது என்ற கேள்வியும் எழுகிறது. வெளியுறவுத் துறை கூறியது என்ன?
கடந்த ஜூன் 24-ம் தேதி, 1967-ம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் ‘பாஸ்போரட் சேவா திவாஸ்’ வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் கொண்டாடப்பட்டது. அப்போது இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு விளக்கம் அளித்தது.
அதில் ‘இந்தியர் ஒருவர் வைத்திருக்கும் இந்திய பாஸ்போர்ட் என்பது குடியுரிமையை நிரூபிக்க சட்டப்பூர்வ ,உறுதியான ஆதாரமாகக் கருத முடியாது. ஆனால், சர்வதேச பயணத்தை மேற்கொள்ள அவருக்கு அளிக்கப்பட்ட அதிகாரபூர்வ ஆவணம்; அடையாள அட்டை மட்டும்தான்’ என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள விளக்கம் பெரிய விவாதத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குழப்பும் விவரங்கள்
2019-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி என்ஆர்சி எனப்படும் தேசிய குடியுரிமைப் பதிவேடு குறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அமைப்பு வெளியிட்ட அறிக்கை முரணாகவும் குழப்பமாகவும் இருந்தது.
அதில் ‘ஒருவர் இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க பிறந்த தேதி, பிறந்த ஊர் குறித்த எந்த ஆவணத்தையும் தாக்கல் செய்யலாம். இருப்பினும், ஏற்றுக்கொள்ளக்கூடிய இத்தகைய ஆவணங்கள் குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
‘இந்தியக் குடியுரிமையை உறுதியாக நிரூபிக்க எந்த ஆவணம்தான் தேவை?’ எனும் கேள்வி தற்போது இந்தியர்கள் மனதில் எழுந்துள்ளது.
சரி, குடியுரிமைச் சட்டம் 1955, அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?
இந்தியக் குடியுரிமை என்பது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஆவணத்தின் மூலமாகவோ அல்லது அந்த ஓர் ஆவணத்தை வைத்து மட்டும் உறுதி செய்வது இல்லை. இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி, 1950 இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி, 1950 ஜனவரி 26-ம் தேதி அல்லது அதற்கு பின்னரோ மற்றும் 1987-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதிக்கு முன்னரோ இந்தியாவில் பிறந்தவராக இருந்தால், அவர் பிறப்பால் இந்தியர் ஆவார்
1987-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின் ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தால், அவரின் பெற்றோர் இருவரில் ஒருவர் இந்தியராக இருத்தல் வேண்டும்.
ஒரு நபர் 2004 டிசம்பர் 3-ம் தேதிக்குப் பின் பிறந்திருந்தால், பெற்றோர் இருவருமே இந்தியர்களாக இருந்தால் மட்டுமே பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை கோர முடியும். அல்லது பெற்றோரில் ஒருவர் இந்தியராகவும், மற்றொருவர் சட்டவிரோத குடியேறியாக இல்லாமல் இருத்தல் வேண்டும்.
1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் 5 தனித்துவமான வழிகள் மூலம் ஒரு நபர், தனது குடியுரிமைத் தகுதியைப் பெறுகிறார் எனப் பட்டியலிட்டது. அதில் பிறப்பு, வம்சாவளி, குடியுரிமை, பதிவு, குடியுரிமை பெறுதல் ஆகியவை மூலம் குடியுரிமையை நிரூபிக்க முடியும் என விளக்கப்பட்டுள்ளது.


















