
சென்னை: ஜூன் 22-
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 2 பெண்கள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் அர்லேகர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவி்த்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்: விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதும், பல தொழிலாளர்கள் காயமடைந்ததும் எனக்கு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. மேலும், சிகிச்சையில் உள்ள அனைவரும் விரைவில் குணமடைந்து முழு உடல்நலம் பெறவும் பிரார்த்திக்கிறேன்.எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். இதுபோன்ற துயரச் சம்பவங்கள், இனியும் ஏற்படாமல் இருக்க, தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வுகளை நடத்த வேண்டும்.அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை காக்க உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: நச்சு வாயுவை சுவாசித்து பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: கடந்த சில காலங்களாகவே தொழில் நடக்கும் பகுதிகளில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்வதும் அதனால் உயிர்பலிகள் உண்டாவதும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


















