Home செய்திகள் உலக செய்திகள் பிரான்ஸில் தீவிரமடையும் பள்ளி மாணவர் போராட்டம்

பிரான்ஸில் தீவிரமடையும் பள்ளி மாணவர் போராட்டம்

பிரான்ஸ், அக். 4-
பொதுக்கடன் அதிகரிப்பு மற்றும் அரசின் செலவினக் குறைப்பு நடவடிக்கைகளால் கல்வித் துறை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பிரான்ஸ் முழுவதும் பள்ளி மாணவர்கள் ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாரீஸ் புறநகர்ப் பகுதிகளில் தொடங்கிய போராட்டம், சமூக ஊடகங்கள் மூலம் நாடு முழுவதும் பரவியுள்ளது. தற்போது கல்லூரி மாணவர்களும் இதில் இணைந்துள்ளனர்.பிரான்ஸின் பொதுக்கடன் 3.596 டிரில்லியன் யூரோக்களாக உயர்ந்துள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 119 சதவீதமாகும்.
கடனுக்கான ஆண்டு வட்டி 67 முதல் 77 பில்லியன் யூரோக்கள் வரை இருப்பதாகக் கூறப்படுகிறது. தொடர் பட்ஜெட் பற்றாக்குறை, கரோனா கால நிதியுதவி, ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகான எரிபொருள் விலை உயர்வு மற்றும் வட்டி விகித அதிகரிப்பு ஆகியவை கடன் உயர்வுக்குக் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. கடனைக் கட்டுப்படுத்த அரசு 54 பில்லியன் யூரோ செலவினக் குறைப்பை மேற்கொள்ள முயல்கிறது. இதன் காரணமாக கல்வி நிதி குறைக்கப்பட்டு, ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மாணவர்களும் ஆசிரியர்களும் குற்றம் சாட்டுகின்றனர். பல பள்ளிகளில் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதுடன், சுகாதாரமற்ற கழிப்பறைகள், காற்றோட்டம் மற்றும் மின்விசிறி இல்லாத வகுப்பறைகள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டிய நிலையும், ஆசிரியர்கள் இல்லாமல் நேரத்தைச் செலவிடுவதும் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மாணவர்கள் பாதுகாப்பான கல்விச் சூழல், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாடு, வகுப்பு நேர வரையறை மற்றும் கூடுதல் ஆசிரியர் நியமனம் ஆகியவற்றைக் கோருகின்றனர். இதுவரை 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3,700-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 1,000-க்கும் மேற்பட்டவை மூடப்பட்டுள்ளன. பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு இணையவழி வகுப்புகளை நடத்த உத்தரவிட்டுள்ளார். மோதல்களில் 85 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.