
பெங்களூரு: அக். 7-
பெங்களூரு கிராமப்புற பகுதிகளான சென்னராயப்பட்டணா மற்றும் விஸ்வநாதபுரா அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் பலத்த காயமடைந்தனர்.
சென்னராயப்பட்டணா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை 648-ல் உள்ள பாலேஹள்ளி கிராஸ் அருகே கேண்டர் வாகனமும் புல்லட் பைக்கும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த புல்லட் பைக் ஓட்டுநர் ஆதர்ஷ் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதே காவல் எல்லைக்குட்பட்ட நல்லோஹள்ளி கேட் மற்றும் சென்னேனஹள்ளி கேட் இடையே இன்று காலை 5.30 மணி அளவில் பழுதாகி நின்ற லாரியை பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது. இதில் லாரி டிரைவர் ராமப்பா (64) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கிளீனர் மூர்த்தி உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விஸ்வநாதபுரா அருகே பாஷெட்டிஹள்ளியில் நேற்று இரவு 12 மணி அளவில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற தனுஷ் (21), சேத்தன் ஆகிய இரு இளைஞர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை விஸ்வநாதபுரா போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அனைத்து சம்பவங்கள் குறித்தும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
















