Home செய்திகள் உலக செய்திகள் பென் குரியன் விமான நிலையத்தைத் தாக்க சதி

பென் குரியன் விமான நிலையத்தைத் தாக்க சதி

டெல் அவிவ், அக். 6- இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தின் மீது விமானத்தை மோதி, பெரும் உயிரிழப்பை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டியதாக ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப். 30-ம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு ஃபிளை துபாய் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தை நடுவானில் கடத்த ஹமாம் அல் ஹமாமி முயன்றதாகவும், இந்திய தலைமை பைலட் ஸ்மித் மச்சார் தனது உயிரைப் பணயம் வைத்து அந்த முயற்சியை முறியடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஐக்கிய அரபு அமீரக போலீஸார் ஹமாமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஹமாமி அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தில், இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்துவதே தனது நோக்கம் என்றும், அதற்காகவே ஃபிளை துபாய் நிறுவனத்தில் பணியில் சேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலையில் பென் குரியன் விமான நிலையத்தின் மீது விமானத்தை மோத திட்டமிட்டதாகவும், விமானத்தில் தனது நெருங்கிய நண்பர்கள் இருந்ததால் கடைசி நேரத்தில் அந்தத் திட்டத்தை கைவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். செப். 30-ம் தேதி அதே பாணியில் தாக்குதல் நடத்த, இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை கொலை செய்து விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றதாகவும் ஹமாமி தெரிவித்துள்ளார். ஆனால், ஸ்மித் காக்பிட் கதவைத் திறந்து சதியைத் தடுத்ததாகவும், பின்னர் விமானத்தை தரையில் மோதச் செய்வதற்காக ஆட்டோ பைலட்டைத் துண்டித்து, என்ஜின்களை அணைத்து, கட்டுப்பாட்டு கருவிகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மணிக்கு 970 கி.மீ. வேகத்தில் விமானம் கீழ்நோக்கிச் சென்றபோது பயணிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். இரு பைலட்டுகளும் விமானத்தை மீண்டும் இயக்கி பாதுகாப்பாக தரையிறக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பென் குரியன் விமான நிலையத்தை தினமும் சுமார் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்துவதாக இஸ்ரேல் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஸ்மித்தின் போராட்டத்தால் மிகப்பெரிய தாக்குதல் தடுக்கப்பட்டதாகவும் அவை கூறின.