Home மாவட்டங்கள் கிருஷ்ணகிரி பெற்றோரிடம் கோபித்து சென்னைக்கு சென்ற சிறுவன் மீட்பு

பெற்றோரிடம் கோபித்து சென்னைக்கு சென்ற சிறுவன் மீட்பு

கிருஷ்ணகிரி, அக். 25-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாயமான 12 வயது பள்ளி மாணவன், சென்னை புளியந்தோப்பு பகுதியில் பத்திரமாக மீட்கப்பட்டான். பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்து ரூ.1,000 எடுத்துச் சென்ற சிறுவன், உறவினர்களைத் தேடி சென்னை சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் பேக்கரி நடத்தி வரும் திருநாவுக்கரசின் மகன் சஞ்சய். இவர் அங்குள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மற்றும் டியூஷன் வகுப்புகள் முடிந்ததும் வழக்கம்போல் வீட்டுக்குப் புறப்பட்டார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாத நபரிடம் லிப்ட் கேட்டு, அவருடன் சென்றதாக கூறப்படுகிறது.நீண்ட நேரமாகியும் சஞ்சய் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடினர். தகவல் கிடைக்காததால் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவன் லிப்ட் கேட்டு சென்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். சிறுவனை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற நபரை இரவோடு இரவாக பிடித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. சிறுவன் கடத்தப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். ஊத்தங்கரையில் இருந்து சென்னைக்கு பஸ் வசதி மட்டுமே உள்ளதால், பஸ் மூலம் சிறுவன் சென்னை சென்றிருக்கலாம் என போலீசார் கருதினர். சென்னையில் உள்ள உறவினர்களைத் தேடிச் சென்ற சஞ்சய்க்கு சரியான முகவரி தெரியாததால், புளியந்தோப்பு பகுதியில் வழிதெரியாமல் நின்றார். அப்போது அங்கு ஆட்டோ ஓட்டி வந்த பிரகாஷ், சிறுவனிடம் விசாரித்தார். அவரது செல்போன் மூலம் தந்தையைத் தொடர்புகொண்ட சஞ்சய், தான் சென்னையில் இருப்பதாக தெரிவித்தார். சிறுவனை போலீசாரிடம் ஒப்படைக்குமாறு தந்தை கேட்டுக்கொண்டதையடுத்து, பிரகாஷ் அவரை புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.