Home மாவட்டங்கள் சென்னை பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

திருவள்ளூர்: நவ. 27-
உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனரை அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் தாக்கியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் வெண்கல் அருகே வாணியச்சத்திரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பேரனுமான உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். மேலும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும், திமுக இளைஞரணி செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். அவர் இன்று தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.
இதையொட்டி, வெண்கல் அருகே உள்ள வாணியச்சத்திரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பேனர் வைக்கப்பட்டது. இந்தப் பேனரை அமைக்கும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளான அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வீரவேந்தர் (22), காரணி கிராமத்தைச் சேர்ந்த வேலன் (30), வாணியச்சத்திரத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் (22) ஆகிய 3 பேர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்சாரக் கம்பி மீது இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த பேனர் உரசியதாக கூறப்படுகிறது. இதனால் பேனரில் மின்சாரம் பாய்ந்து, அதைப் பிடித்திருந்த 3 பேர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு, படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து, 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், வீரவேந்தரும் வேலனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஆல்பர்ட்டுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரு இளைஞர்களும், அப்பகுதி திமுக ஒன்றியச் செயலாளர் தங்கம் முரளியின் உறவினர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.