
திருமலை, ஜூன் 24- திருமலையை சேர்ந்த இடைத்தரகர் நிம்மல ஸ்ரீநிவாஸுடன் குண்டூரைச் சேர்ந்த ஸ்ரீநிவாச ரெட்டி பழகி வந்துள்ளார். கடந்த 22ம் தேதி, தனது உற்றார், உறவினர்கள் என மொத்தம் 60 பேருக்கு ஏழுமலையான் தரிசனம், திருமலையில் தங்கும் அறை போன்றவை வேண்டும் என ஸ்ரீநிவாச ரெட்டி கேட்டுள்ளார். இதற்காக விஐபி தரிசனத்திற்காக 60 பேருக்கு ரூ.3.60 லட்சம், 12 தங்கும் அறைகளுக்காக ரூ.62 ஆயிரம் என மொத்தம் ரூ.4.22 லட்சத்தை வங்கி மூலம் ஸ்ரீநிவாச ரெட்டி, நிம்மல ஸ்ரீநிவாஸுக்கு அனுப்பி வைத்துள்ளார். இவர்கள் அனைவருக்கும் கடந்த ஜூன் 22ம் தேதி தரிசனம் செய்து வைப்பதாக நிம்மல ஸ்ரீநிவாஸ் கூறி, எம்.எல்.ஏக்கள், எம்பிக்களின் பெயரில் போலி சிபாரிசு கடிதங்களை தயாரித்துக் கொடுத்துள்ளார்.திருமலையில் உள்ள கூடுதல் நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் அந்த கடிதங்களை கொடுத்துள்ளனர். இவை அனைத்தும் போலி என தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் திருமலை முதலாவது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து தலைமறைவாகி உள்ள இடைத்தரகர் நிம்மல ஸ்ரீநிவாஸ் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.



















