
சென்னை: அக். 10-
புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, முன்னோர்களை நினைத்து தர்ப்பணம், திதி, சிரார்த்தம் மற்றும் தானம் செய்வதற்கான முக்கிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாள் ‘பித்ரு அமாவாசை’, ‘சர்வ பித்ரு அமாவாசை’, ‘பித்ரு மோட்ச அமாவாசை’ உள்ளிட்ட பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் சிறப்புக்குரியவை என நம்பப்படுகிறது. பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்யத் தவறியவர்களும் மகாளய அமாவாசையன்று தர்ப்பணம் செய்யலாம் என கூறப்படுகிறது. முன்னோர்களில் யாரை நினைத்து வழிபாடு செய்யப்படுகிறதோ, அவர்கள் மட்டுமே தர்ப்பணத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை மற்ற அமாவாசைகளில் உள்ளது. ஆனால், மகாளய அமாவாசையன்று தர்ப்பணம் செய்தால் 21 தலைமுறைகளைச் சேர்ந்த முன்னோர்கள் ஒன்றாக வந்து ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிப்பார்கள் என கருதப்படுகிறது.
முன்னோர்கள் இறந்த திதி தெரியாதவர்களும் இந்நாளில் தர்ப்பணம் செய்யலாம் என நம்பப்படுகிறது.
ஆவணி மாத பவுர்ணமிக்குப் பிறகு வரும் பிரதமை முதல் 15 நாட்கள் ‘மகாளய பட்சம்’ எனப்படுகிறது. பித்ரு லோகத்திலிருந்து பூமிக்கு வரும் முன்னோர்கள், தங்கள் சந்ததியினர் அளிக்கும் தர்ப்பணம், சிரார்த்தம், தானம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு குடும்பத்தினரை ஆசீர்வதிப்பதாக ஐதீகம். மகாளய அமாவாசை முடிந்ததும் அவர்கள் மீண்டும் பித்ரு லோகத்துக்குத் திரும்புவார்கள் என்றும் நம்பப்படுகிறது.
மகாளய அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடி, ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம் சுருளி அருவியிலும் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்தனர். வீரபாண்டி முல்லைப் பெரியாற்றங்கரையிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, எள்ளுப் பிண்டம் படைத்து முன்னோர்களை வழிபட்டனர். திருவண்ணாமலை ஐயங்குளக்கரையிலும், திருச்செந்தூர் கடற்கரையிலும் மக்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.













