Home மாவட்டங்கள் சென்னை மதுராந்தகம் தாராபுரம் தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு – பலத்த பாதுகாப்பு

மதுராந்தகம் தாராபுரம் தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு – பலத்த பாதுகாப்பு

சென்னை: அக். 5-
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இரு தொகுதிகளிலும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குகள் அக். 9-ம் தேதி எண்ணப்படுகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்வராகப் பதவியேற்ற பின்னர், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதேபோல், அதிமுகவைச் சேர்ந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 6 எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதையடுத்து 7 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் கடந்த செப். 7-ம் தேதி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. மதுராந்தகத்தில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர். தாராபுரத்தில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். இரு தொகுதிகளிலும் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், பழனிசாமி, சீமான் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். தேர்தல் விதிகளின்படி பிரச்சாரம், பொதுக்கூட்டம், ஊர்வலங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தினர், கட்சி பணியாளர்கள், வாக்காளர்கள் அல்லாதோர் தொகுதிகளைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர்.