
சென்னை: ஆக. 19-
அறிமுகமில்லாத நபர்களிடம் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர வேண்டாம் என கல்லூரி மாணவிகளுக்கு சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
சென்னை பெருநகர காவல் துறை சார்பில், சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்களையும் மாணவர்களையும் பாதுகாக்கும் நோக்கில் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, சென்னை ராணி மேரி கல்லூரியில் நேற்று இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துணை ஆணையர் கே.எஸ்.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தற்போது பரவி வரும் பல்வேறு மோசடிகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.குறிப்பாக, ஆன்லைன் வர்த்தக மோசடி, டிஜிட்டல் கைது மோசடி, போலி முதலீட்டு மோசடி உள்ளிட்ட பல்வேறு இணையவழி குற்றங்கள் குறித்தும், அவற்றில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.மேலும், மாணவிகள் சமூக வலைதளங்களை கையாளும் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.குறிப்பாக, அறிமுகமில்லாத நபர்களிடம் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தகவல்களைப் பகிர வேண்டாம் எனவும், சந்தேகத்துக்கிடமான லிங்க்-குகளை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டது.













