Home மாவட்டங்கள் சென்னை முத்துக்குமார் வாக்குமூலத்தால் அன்பில் மகேஷுக்கு நெருக்கடி

முத்துக்குமார் வாக்குமூலத்தால் அன்பில் மகேஷுக்கு நெருக்கடி

சென்னை: நவ. 17-
பள்ளிகளுக்கு பாதுகாப்புச் சான்றிதழ் உள்ளிட்ட அங்கீகாரங்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, கடந்த தி.மு.க. ஆட்சியில் ரூ.400 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் தொடர்ந்து கூறி வந்த நிலையில், கைது செய்யப்பட்ட தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், தனியார் பள்ளிகளிடம் கோடிக்கணக்கில் வசூல் செய்ததாக காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, முந்தைய தி.மு.க. ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக கே.என். நேரு, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தி.மு.க. நிர்வாகி அரசக்குமார் முதலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில், அன்பில் மகேஷும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முத்துக்குமாருக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சரணடைந்த அவரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து 4 நாட்கள் காவலில் விசாரித்தனர். அப்போது அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலத்தில், சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் தனக்கு தனி அறையும் அரசு வாகனமும் ஒதுக்கப்பட்டதாக முத்துக்குமார் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தர பணம் வசூலித்ததாகவும், வழங்கப்பட்ட அங்கீகாரத்தை 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டதாகவும் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானம் இல்லாத, கட்டுமானப் பணிகள் முடிக்கப்படாத பள்ளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும், அதிகாரிகளின் உதவியுடன் புகார்கள் இருந்த பள்ளிகளை மிரட்டி, மாவட்டக் கூட்டங்கள் மூலம் கோடிக்கணக்கில் வசூல் செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இது அன்பில் மகேஷுக்குத் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முத்துக்குமாரை வருகிற 26-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அன்பில் மகேஷிடம் விசாரணையைத் தீவிரப்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.