
மெக்கா, செப். 16- சவுதி அரேபியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள மெக்கா, ஜெத்தா, தாயிஃப் ஆளுநரகங்கள் உள்ளிட்ட பல நகரங்களில் சவுதி சிவில் பாதுகாப்புத்துறை செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுத்தது. அவை விரைவிலேயே திரும்பப் பெறப்பட்டன. வரலாற்றில் முதல்முறையாக மெக்காவில் இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டது. ஈரான் ஆதரவு ஹவுதிகள் கடந்த சில நாள்களாக சவுதியை மீண்டும் மீண்டும் குறிவைத்ததைத் தொடர்ந்து இந்த முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கை எடுக்கப்பட்டது. இஸ்ரேலிய நாளிதழான ‘ஹயோம்’ வெளியிட்ட தகவலின்படி, மதீனாவில் உள்ள பிரின்ஸ் முகமது பின் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு (MED) செல்லும் விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக, சவுதி ஆதரவு பெற்ற சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏமன் அரசு மற்றும் சவுதி படைகள், ஏமனின் தாயிஸ் நகருக்கு அருகிலுள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக அந்த அறிக்கை தெரிவித்தது. மெக்கா நகரில் சாத்தியமான ஆபத்து குறித்து தேசிய முன்எச்சரிக்கை தளம் எச்சரிக்கை வெளியிட்டது. பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், கூட்டமாகச் சேர்வதையும் படம்பிடிப்பதையும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அவசரநிலையில் 911 எண்ணை அழைக்குமாறும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு 2026 செப்டம்பர் 15 அன்று வெளியானது. இதற்கு முந்தைய நாள், ஏமனிலிருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் சவுதியில் 13 பேர் காயமடைந்தனர். சவுதி சிவில் பாதுகாப்பு இயக்குநரகம் எக்ஸ் தளத்தில், “மெக்கா நகரில் ஆபத்து கடந்துவிட்டது. உங்கள் பாதுகாப்புக்காக சிவில் பாதுகாப்புத்துறையின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். கூட்டமாகச் சேர்வதையும் படம்பிடிப்பதையும் தவிர்க்கவும். அவசரநிலையில் 911-ஐ அழைக்கவும்” எனத் தெரிவித்தது. முன்னதாக ஆறு பிராந்தியங்களில் குறுகிய நேரத்துக்கு வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. மெக்காவை நோக்கிச் சென்ற ஹவுதிகளின் ஆளில்லா விமானத்தை சவுதி தலைமையிலான கூட்டணி சுட்டுவீழ்த்தியதாக வெளியான தகவலை ஹவுதி அதிகாரி ஹாசெம் அல்-அசாத் மறுத்தார். “மெக்காவை குறிவைத்ததாகக் கூறப்படுவது பழைய பொய்; அது இனி யாரையும் ஏமாற்றாது” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.













