
சென்னை: மே 7 –
தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் (பொறுப்பு) அழைப்பு விடுக்காததால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் ஒரு போராட்டத்தை நடத்த தவெகவினர் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தவெக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 108 இடங்களில் வென்றது. இதையடுத்து தனிபெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது.
இதற்காக நேற்றைய தினம் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை சந்தித்த விஜய், 107 தவெக எம்எல்ஏக்கள் + 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் என 112 எம்எல்ஏக்களின் கையெழுத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் அவகாசம் கேட்ட நிலையில் ஆளுநரோ 2 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்க முடியும் என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. எனினும் அவர் எப்படியும் ஆட்சி அமைக்க அழைப்பார் என்ற நம்பிக்கையில் இன்று காலை 11.30 மணிக்கு விஜய் முதல்வராக பதவியேற்க நேரு உள்விளையாட்டரங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. இதனால் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் விஜய்க்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டது. அதிமுக- திமுக இணைந்து ஆட்சி அமைக்க போவதாக தகவல்கள் வெளியாவதால் தவெகவினர் ஆத்திரத்தில் உள்ளனர்.
இதனால் விஜய்க்கு ஆதரவாக ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மெரினாவில் ஒன்று கூடி போராட்டம் நடத்த தவெகவினர் திட்டமிட்டுள்ளதாக ககவல்கள் வெளியாகியுள்ளன. த.வெ.க. தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், வரும் மணிநேரங்களில் மெரினாவில் ஒரு மாபெரும் போராட்டம் அல்லது ஒன்று கூடுதல் நடைபெற வாய்ப்புள்ளதாக விஜய்யின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளைக் குவித்து வருகின்றனர். பல ரசிகர் பக்கங்கள் மற்றும் கட்சி சார்ந்த கணக்குகளில், “தயாராக இருங்கள்”, “அழைப்பு வந்தால் ஒன்றுகூடுங்கள்” எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இது தன்னிச்சையான மக்கள் எழுச்சி குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகள் நிலைமையைச் சமாளிக்கச் சென்னை காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மெரினா கடற்கரை, விஜய்யின் இல்லம் மற்றும் நகரின் முக்கியமான உணர்ச்சிகரமான பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. த.வெ.க. தொண்டர்கள் திடீரெனக் கூடுவதைத் தவிர்க்கக் கூடுதல் காவலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மெரினா கடற்கரையில் பொதுக்கூட்டங்கள் அல்லது போராட்டங்களுக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அனுமதியும் வழங்கப்படவில்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஆட்சியமைப்பதில் நிலவும் குழப்பம் மற்றும் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் நிலவும் தாமதமே இந்தத் பதற்றமான சூழலுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இணையத்தில் மெரினா போராட்டம் குறித்த ‘ஹேஷ்டேக்குகள்’ வைரலாகி வருகின்றன. சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைத் தடுக்கக் காவல்துறையினர் சமூக வலைதளக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.



















