
புதுடெல்லி, செப். 17- யுபிஐ தானியங்கி பரிவர்த்தனை முறையில் செலுத்தப்படும் ஓடிடி சந்தா, எஸ்ஐபி, காப்பீட்டு பிரீமியம் உள்ளிட்ட தொடர் கட்டணங்களுக்கு 0.4 சதவீத எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்படாது என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) தெளிவுபடுத்தியுள்ளது. அதேநேரத்தில், இத்தகைய பரிவர்த்தனைகளுக்கு சிறிய அளவில் கட்டணம் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
அக்டோபர் 15-ம் தேதி முதல் ரூ.2,000-க்கும் மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் (எம்டிஆர்) விதிக்கப்படும் என்று என்பிசிஐ முன்பு அறிவித்திருந்தது.
இதனால், யுபிஐ தானியங்கி (ஆட்டோபே) முறையில் செலுத்தப்படும் மாதாந்திர கட்டணங்களுக்கும் இதே கட்டணம் பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தற்போது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “வழக்கமான வணிகப் பயன்பாட்டுக்காக யுபிஐ வாயிலாக கட்டணம் செலுத்தும் முறைக்கும், ஆட்டோபே முறைக்கும் இடையே முக்கிய வேறுபாடு உள்ளது. எனவே,
தானியங்கி முறை இந்தப் புதிய எம்டிஆர் கட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஒருமுறை அல்லது நேரடிப் பரிவர்த்தனைகளுக்கான விதிகளை, ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட தொடர் கட்டண வசதிக்கு அப்படியே பயன்படுத்த முடியாது என்பதே இதன் பொருள். பயனர்கள் முன்கூட்டியே வழங்கிய அனுமதியின் அடிப்படையில் ஆட்டோபே செயல்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் தனித்தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













