Home மாவட்டங்கள் பெங்களூர் ஜெயலலிதாவின் சொத்துக்களைதருவதாக கூறி மோசடி: கும்பல் கைது

ஜெயலலிதாவின் சொத்துக்களைதருவதாக கூறி மோசடி: கும்பல் கைது

பெங்களூர்: செப்.18 –
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘பினாமி சொத்துக்கள் வந்துள்ளதாகக் கூறி, ரூ. 10 லட்சம் கொடுத்தால் ரூ. 1 கோடி தருவதாக நம்பவைத்து கோடிக்கணக்கில் சுருட்டிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய ‘பலே’ கும்பலை ஹோஸ்கோட்டே போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
வழக்கின் முக்கிய குற்றவாளியான எளச்சேனஹள்ளியைச் சேர்ந்த சசிகுமார் என்பவனை போலீசார் முதலில் தூக்கினர். இவன் கடந்த சில ஆண்டுகளாக தனது நண்பர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் வீடியோ காலில் பண மூட்டைகளைக் காட்டி ஆசையை தூண்டியுள்ளான். இதில் ஒரு நபரை ‘ஆர்பிஐ மேனேஜர்’ என்று பொய் சொல்லி அறிமுகப்படுத்தி, ஹோஸ்கோட்டே மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் ரூ. 4.5 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளான். காசோலை, ரொக்கம் மற்றும் தங்க நகைகளாகப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியது தொடர்பாக கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தீவிர வேட்டையில் இறங்கிய போலீசார் சசிகுமார், நாகேஷ், பிரமிளா, அம்புஜா மற்றும் வெங்கடரமணப்பா ஆகியோரை கைது செய்து கம்பியில் அடைத்தனர்.
இது குறித்து கிராமப்புற எஸ்.பி. சந்திரகாந்த் கூறுகையில், “குற்றவாளி சசிகுமார் ஏராளமான மக்களை ஏமாற்றியுள்ளான். கொடுத்த பணத்தைக் கேட்கச் சென்றவர்களை பவுன்சர்களை வைத்து மிரட்டியுள்ளான். தலித் அமைப்பின் தலைவரான நாகேஷ் என்பவருக்குப் பணம் கொடுத்து, அவர் மூலமாகப் புகார்களைத் தடுக்கவும் போலீசாருக்கே மிரட்டல் விடுக்கவும் சதி செய்துள்ளான்” என்றார். மக்களிடம் ஏமாற்றிய பணத்தில் குற்றவாளிகள் சொகுசு வாகனங்கள் மற்றும் நிலங்களை வாங்கி குவித்துள்ளனர். இந்த மோசடியில் இன்னும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புகார்கள் வரும் பட்சத்தில் விசாரணை தொடர்ந்து தீவிரமாக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.