Home செய்திகள் தேசிய செய்திகள் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடரும்: இந்தியா

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடரும்: இந்தியா

புதுடெல்லி: செப்.18 –
இந்தியா தனது 140 கோடி மக்களின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. நாட்டின் எரிசக்தித் தேவையை நிறைவேற்றுவதில் இந்தியா உறுதியுடன் இருப்பதாகவும் கூறியுள்ளது.
ரஷ்யா மற்றும் ஈரான் மீது தடைகளை விதிக்கும் மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த மசோதா, ரஷ்யாவிடம் அதிகளவில் எண்ணெய் வாங்கும் முதல் ஐந்து நாடுகளான சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் மீது 100 சதவீதம் வரை சுங்கவரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அதிகாரம் வழங்குகிறது. இந்த மசோதா விரைவில் அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அவர் கையெழுத்திட்டவுடன் அது நடைமுறைக்கு வரும். இந்த அதிகாரம் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் மேற்கண்ட நாடுகளுக்கு எதிரான சுங்கவரி நடவடிக்கைக்காக வழங்கப்பட்டுள்ளது.இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் 140 கோடி மக்களின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பல்வேறு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்வது தொடரும். கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பான முடிவுகள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகள் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள, இந்திய தொழில் அமைப்புகளுடன் இணைந்து அரசு செயல்படும். இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.