Home செய்திகள் தேசிய செய்திகள் நவோதயா பள்ளிகளுக்கு இடம்: 3 மாத அவகாசம்

நவோதயா பள்ளிகளுக்கு இடம்: 3 மாத அவகாசம்

புதுடெல்லி: செப்.18 –
தமிழக அரசு நவோதயா பள்ளிகளுக்கான இடங்களை மூன்று மாதங்களுக்குள் அடையாளம் காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் புதிய அரசு மாறியுள்ளதால், அதன் மனநிலையிலும் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. நவோதயா பள்ளிகளுக்கான இடத்தை அடையாளம் காணும் உத்தரவை ஏன் செயல்படுத்தவில்லை, தமிழகத்தில் அவற்றை அமைப்பதில் என்ன சிக்கல், ஏன் எதிர்க்கிறீர்கள் என்று நீதிபதிகள் கேட்டனர்.
தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, போதிய பள்ளிக் கட்டமைப்பு இல்லாத மாநிலங்களில் நவோதயா பள்ளிகளை அமைக்கலாம்; ஆனால் தமிழகத்தில் பள்ளிக் கட்டமைப்பு சிறப்பாக இருப்பதுடன், கிராமப்புற மாணவர்களுக்கும் சிறந்த கல்வி வழங்கப்படுவதாக தெரிவித்தார். ஏற்கெனவே சிறந்த கட்டமைப்பைக் கொண்ட தமிழகத்துக்கு நவோதயா பள்ளிகள் தேவையில்லை என்பதே அரசின் நிலைப்பாடு என்றும், மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றும் நவோதயா பள்ளிகள் தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு முரணானவை என்றும் கூறினார். கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் மாற்றம் கொண்டுவர அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
மொழிதான் பிரச்சினை என்றால், இந்திக்கு பதிலாக வேறு மொழியை மூன்றாவது மொழியாகக் கற்பிக்கலாமே என்றும், தமிழக அரசு மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.