
புதுடெல்லி: செப்.18 –
டாக்டர்களின் பரிந்துரை தேவைப்படும் மருந்துகளின் விற்பனையை கண்காணிக்கும் நோக்கில், மருந்துக் கடைகளில் ‘சி.சி.டி.வி.’ எனப்படும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டாக்டரின் அதிகாரப்பூர்வ மருந்துச் சீட்டு இன்றி, போதைப் பழக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, உயிருக்கு ஆபத்தான மருந்துகள் சட்டவிரோதமாக விற்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இவற்றைத் தடுக்க, மருந்துகள் விதிகளில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: போதைப் பழக்கத்துக்கு ஆளாகும் இளைஞர்கள் மற்றும் சிறார்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், மருந்து விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்த விதிகள் கொண்டு வரப்படுகின்றன.
இதன்படி, சில்லறை மருந்து விற்பனைக் கடைகளில், டாக்டரின் மருந்துச் சீட்டு மூலம் வழங்கப்படும் அனைத்து மருந்துகளும், கண்காணிப்பு கேமராவின் நேரடி கண்காணிப்பு எல்லைக்குள்ளேயே வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும். இதன் மூலம், மருந்து வழங்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் கேமரா கண்காணிப்புக்கு உட்பட்டதாக இருக்கும்.
அவ்வாறு கேமராவில் பதிவாகும் காட்சிகளை, மருந்துக் கடை உரிமையாளர்கள் தங்களது கணினி அல்லது சேமிப்பகங்களில் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். சுகாதாரத் துறை அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் இந்தப் பதிவுகளை ஆய்வு செய்யவும் சட்டத் திருத்தம் வழிவகுக்கும்.டாக்டரின் மருந்துச் சீட்டு இன்றி நேரடியாகப் பெறப்படும் மருந்துகள், மனநலப் பாதிப்புகளுக்கான மருந்துகள் உள்ளிட்டவை தவறாகப் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளவை. எனவே, இத்தகைய மருந்துகளின் விற்பனையைத் துல்லியமாகச் சரிபார்க்க இந்தத் தரவுகள் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை, பொதுமக்களுக்கு நேரடியாக மருந்துகளை வழங்கும் மருந்துக் கடைகளுக்கு மட்டுமே பொருந்தும். மொத்த மருந்து விற்பனை செய்யும் விநியோகஸ்தர்களுக்கு இந்தச் சட்டத் திருத்தத்தில் விலக்கு அளிக்கப்படும். இந்தச் சட்டத் திருத்தம் குறித்து பொதுமக்களும், மருந்தகக் கூட்டமைப்பினரும் தங்களது கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்படும் கருத்துகளைப் பரிசீலித்த பின்னர், சட்டம் இறுதி செய்யப்பட்டு, நாடு முழுவதும் அமலுக்கு வரும் என சுகாதாரத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.













