
வாஷிங்டன், செப். 16- இந்தியாவில் யூபிஐ பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.04% எம்டிஆர் எனப்படும் வணிகர் தள்ளுபடி விகிதக் கட்டணத்தை மத்திய அரசு விதித்துள்ளது. இது பொதுமக்களிடம் அல்ல, வணிகர்களிடம் வசூலிக்கப்பட உள்ளது. இதன் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வந்த யூபிஐ, படிப்படியாகக் கட்டண முறைக்கு மாறுவதாகத் தெரிகிறது.எம்டிஆர் கட்டணங்கள் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளன. கட்டணம் வாடிக்கையாளர்களிடம் நேரடியாகப் பெறப்படாது என்றாலும், வணிகர்கள் அந்தச் செலவைப் பொருட்களின் விலையில் மறைமுகமாகச் சேர்த்து வாடிக்கையாளர்களிடமே சுமத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக அழுத்தங்களுக்கு பணிந்து இந்தியா தனது டிஜிட்டல் கொள்கையை மாற்றியுள்ளதா என உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அமைப்பான குளோபல் டிரேட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (ஜிடிஆர்ஐ) கேள்வி எழுப்பியுள்ளது. இந்தச் சட்ட மாற்றத்துக்குப் பின்னால் அமெரிக்காவின் மறைமுக அழுத்தம் இருப்பதாக ஜிடிஆர்ஐ நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க வர்த்தக பிரதிநிதியின் 2026ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வர்த்தக அறிக்கையில், பிரேசிலின் ‘பிக்ஸ்’ மற்றும் இந்தியாவின் ‘யூபிஐ, ரூபே’ அமைப்புகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யூபிஐ இலவசமாக இருந்ததால் மக்கள் கார்டு பயன்பாட்டைத் தவிர்த்து அதற்கு மாறினர். இதனால் அமெரிக்காவின் முன்னணி கார்டு நிறுவனங்களான விசா, மாஸ்டர்கார்டு ஆகியவை வருவாயையும் வர்த்தகத்தையும் இழந்ததாக அந்த அறிக்கை குற்றம்சாட்டியது. ரூபே கார்டுகளுக்கு அரசு அளித்த அதிக முக்கியத்துவத்துக்கும் அதில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. யூபிஐ, ரூபே வருவதற்கு முன்பு விசா, மாஸ்டர்கார்டு ஆகியவை இந்தியாவில் அதிகம் புழக்கத்தில் இருந்தன. கார்டு கட்டணங்கள் மூலம் அவை பெரும் வருவாய் ஈட்டின. பின்னர் மக்கள், வணிகர்கள் யூபிஐக்கு மாறியதால் அவற்றின் வருமானம் குறைந்தது. இதையடுத்து அமெரிக்க அரசு மூலம் இந்தியாவுக்கு மறைமுக அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.













