
பெங்களூர்: அக். 1-
சாண்டல்வுட் நடிகையும், ஓய்வுபெற்ற காவல் துறை தலைமை இயக்குநர் ராமசந்திரராவின் வளர்ப்பு மகளுமான ரன்யா ராவ் சம்பந்தப்பட்ட பிரம்மாண்ட தங்கம் கடத்தல் வழக்கில், சுங்கத்துறை அதிரடியாக ரூ.89 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
சுங்கத்துறையின் தீவிர விசாரணையில், 2024 மார்ச் 7 முதல் 2025 பிப்ரவரி 18 வரையிலான காலத்தில், நடிகை ரன்யா ராவ் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து துபாயில் இருந்து சுமார் 113 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கடத்தி வந்தது அம்பலமானது. இந்த வழக்கில் முதன்மை குற்றவாளி தருண் உள்ளிட்ட பலருடன் இணைந்து ரூ.102 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான தங்கத்தை இவர்கள் கடத்தியுள்ளனர்.
இவ்வழக்கில் சுங்கத்துறையின் இணை இயக்குனர் சந்தீப், 399 பக்கங்கள் கொண்ட விரிவான விசாரணை அறிக்கையைத் தயாரித்து, குற்றவாளிகளின் பங்களிப்பிற்கு ஏற்ப அபராதத் தொகையை செலுத்துமாறு அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முன்னதாக, 2025 மார்ச் 3 அன்று துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ரன்யா ராவை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவரிடமிருந்து 14.213 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, உடனடியாக கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மத்திய பொருளாதார உளவுப் பிரிவு இவர் மீது ‘காஃபிபோசா’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது. இதனால் ஓராண்டு காலம் சிறையிலேயே கழிக்க வேண்டியிருந்தது. பின்னர் 2026 ஏப்ரல் 22 அன்று பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த பிரம்மாண்ட கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேருக்கு மொத்தமாக ரூ.244 கோடிக்கும் அதிகமாக சுங்கத்துறை அபராதம் விதித்துள்ளது:
- நடிகை ரன்யா ராவ்: ரூ.89 கோடி
- தருண் கொண்டாரு ராஜு: ரூ.49.51 கோடி
- சாஹில் ஜெயின்: ரூ.53.06 கோடி
- பரத் குமார் ஜெயின்: ரூ.53.06 கோடி















