
புதுடில்லி, ஆகஸ்ட் 19- தேஜஸ் விமானம், டாங்கிகள் மற்றும் போர்க்கப்பல்களில் உள்ள 405 முக்கிய பாதுகாப்பு உபகரணங்கள் ரூ.3,070 கோடி செலவில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்து, உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே ஆயுதங்கள், தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், சமீபகாலமாக உள்நாட்டிலேயே ஆயுதங்கள், தளவாட தயாரிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு ராணுவ தளவாட உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், பாதுகாப்புத் துறையில் இறக்குமதியைக் குறைக்கும் விதமாக 405 முக்கியத்துவம் வாய்ந்த தளவாடப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை பட்டியலை வெளியிட்டுள்ளது. ரூ. 3,070 கோடி மதிப்பிலான வர்த்தக வாய்ப்பை உருவாக்கக்கூடிய இப்பட்டியலில் இந்தியக் கடலோரக் காவல்படையின் 16 பொருட்களும், பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்களின் 389 பொருட்களும் அடங்கும். இதில் போர் விமானங்கள், ஏவுகணைகள், ரேடார்கள் மற்றும் பல முக்கிய பாதுகாப்பு அமைப்புகளுக்கான பாகங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சுஹாய் Su-30MKI, தேஜஸ் LCA விமானங்கள், ஹெலிகாப்டர்கள், T-72, T-90 டாங்கிகள், போர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் ஆகியவற்றுக்கான பாகங்கள் இதில் உள்நாட்டில் தயாரிக்கப்படும். இது இந்தியாவின் உற்பத்தி துறையில் தன்னிறைவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் உள்நாட்டு தொழில் வளர்ச்சி அடையும். இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாகும், இறக்குமதி செலவு குறையும்.













