
கொல்கத்தா, அக். 6- மேற்கு வங்கத்தில் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், ரெஜினகர் தொகுதியில் ஆம் ஜனதா உன்னாயன் கட்சியின் (ஏஜேயுபி) தலைவர் ஹுமாயூன் கபீர் கைது செய்யப்பட்டார். ரெஜினகர் தொகுதியில் அவரது மகன் குலாம் நபி ஆசாத் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.இந்நிலையில், இன்று காலை ரெஜினகரில் உள்ள ஏஜேயுபி கட்சி அலுவலகத்துக்கு ஹுமாயூன் கபீர் வந்திருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸாருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து, ரெஜினகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், முர்ஷிதாபாத் மாவட்டம் நவோடா தொகுதியில் ஹுமாயூன் கபீர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது ஆட்சியில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீது அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இன்றைய இடைத்தேர்தலை முன்னிட்டு ரெஜினகர் தொகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் குறித்து ஹுமாயூன் கபீர் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது வீடு, கட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்தச் சூழலில், குடும்பத்தினருடன் வாக்குப்பதிவு செய்திருந்த ஹுமாயூன் கபீர் கைது செய்யப்பட்டுள்ளார்.













