Home மாவட்டங்கள் சென்னை வீரமணி வழக்கில் ரூ.24 கோடி பறிமுதல்

வீரமணி வழக்கில் ரூ.24 கோடி பறிமுதல்

சென்னை: அக். 17–-
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிரானைட் தொழிலதிபர் வீரமணி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக ஒரு சிறுமியின் தாய் அளித்த 2-வது புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், வீரமணியை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து, 2-வது நாளாக புழல் சிறையிலேயே வைத்து வீரமணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் நபர்கள் குறித்தும், அவர்களுடன் வீரமணிக்கு இருந்த தொடர்புகள் மற்றும் பணப்பரிமாற்றங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தன் மீது வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருப்பதற்காக முக்கிய போலீஸ் அதிகாரிகளுக்கு வீரமணி கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சமாக வழங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும், சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் 3 கிலோ தங்க நகைக்கட்டிகளை வாங்கிய வீரமணி, அவற்றை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பரிசாக வழங்கியிருந்ததும் அம்பலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் தொழிலதிபர் பிரகாஷின் வங்கிக் கணக்குக்கு வீரமணி பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்திருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்ஜாமீன் கோரி பிரகாஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது, பிரகாஷுக்கு சொந்தமான 3 வங்கிக் கணக்குகளை சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முடக்கியுள்ளனர். அந்த வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.24 கோடி பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பணப்பரிமாற்றம், வங்கிக் கணக்குகள் முடக்கம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட தொகை தொடர்பாகவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.