
பாட்னா: அக். 5-
பிஹாரில் பெய்த கனமழையால் கண்டக் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, முதல்வர் சாம்ராட் சவுத்ரி உத்தரவின் பேரில் ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருட்களை போடும் பணி தொடங்கியது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, அம்னூர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பரசுராம்பூர் கிராமத்தில் உள்ள நிவாரண முகாம் அருகே ஹெலிகாப்டரிலிருந்து உணவுப் பொட்டலங்கள் வீசப்பட்டன. அப்போது, முகாம் அருகே நின்ற அனில் குமார் (58) மீது உணவு பொட்டலங்கள் விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஒரு பொட்டலம் அவரது தலையிலும் மற்றொன்று மார்பிலும் விழுந்த பிறகு அவர் சுருண்டு விழுந்து உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து, காவல் துறை அதிகாரி சவீந்திர குமார் தாஸ் கூறும்போது, “ஹெலிகாப்டரில் இருந்து போடப்பட்ட உணவுப் பொட்டலம் தலையில் விழுந்ததால் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவரின் உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடற்கூராய்வு அறிக்கை கிடைத்த பிறகே மரணத்துக்கான உண்மையான காரணத்தை உறுதிப்படுத்த முடியும்” என்றார்.













