Home செய்திகள் தேசிய செய்திகள் 17 மாநிலங்களில் எஸ்எஸ்ஆர்: தேர்தல் ஆணையம் உத்தரவு

17 மாநிலங்களில் எஸ்எஸ்ஆர்: தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: அக். 16-
புதிய வாக்காளர்களையும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) விடுபட்டவர்களையும் சேர்ப்பதற்காக தமிழகம் உள்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு சுருக்கத் திருத்தத்தை (எஸ்எஸ்ஆர்) மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதில் குளறுபடிகள் இருப்பதாகவும், 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சிகளும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் (சிஜேபி) போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்தியா கூட்டணி தலைவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு அளித்ததுடன், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ராகுல் காந்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திடம் பதில் அளிக்க உத்தரவிட்டது.
இந்தச் சூழலில், தமிழகம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், பிஹார் உள்ளிட்ட 14 மாநிலங்களிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் எஸ்எஸ்ஆர் நடைபெற உள்ளது. சேர்க்கைக்கான தகுதி நாளாக 2027 ஜனவரி 1 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2-க்குள் வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்படும். நவம்பர் 12-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். கோரிக்கைகள், ஆட்சேபனைகளை நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை அளிக்கலாம். அவற்றின் மீது டிசம்பர் 28-க்குள் முடிவு எடுக்கப்பட்டு, இறுதி பட்டியல் 2027 ஜனவரி 4-ல் வெளியிடப்படும். பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு வாக்குச்சாவடியில் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கக் கூடாது. வாக்காளர்கள் 2 கிலோமீட்டருக்கு மேல் செல்ல வேண்டிய நிலை இருக்கக் கூடாது; வாக்குச்சாவடிகள் தரைத்தளத்தில் அமைக்கப்பட வேண்டும். ஒரே குடும்பத்தினர் வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் பிரிக்கப்படக் கூடாது. 2 சதவீதத்துக்கும் அதிகமான பெயர் நீக்கங்கள் முன்மொழியப்பட்டால் நேரடி சரிபார்ப்பு நடத்த வேண்டும். எஸ்ஐஆர் நடைபெற்று வரும் அல்லது சமீபத்தில் முடிந்த பகுதிகளுக்கான எஸ்எஸ்ஆர் அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும். இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளிலும் வானிலை காரணமாக அட்டவணை பின்னர் வெளியிடப்படும்.