
டெல்லி: மே 14 –
அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது எந்த நேரத்தில் தாக்குதல் ஆரம்பித்ததோ,அப்போது முதலே இந்தியாவிற்கு நேரடியாக பல்வேறு சிக்கல்கள் வந்த வண்ணம் உள்ளது. முதலில் கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. வணிக சிலிண்டர் பிரச்சனை எல்லாம் இரண்டு மாதம் கடந்தும் சரியாகவில்லை.. வீட்டு சிலிண்டர் கிடைப்பதும் பழைய நிலையை அடையவில்லை. பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்றாலும் நெருக்கடி உள்ளது. இந்த சூழலில் மேற்காசிய போர் நெருக்கடி காரணமாக இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு கட்டுமான பணி மேற்கொள்ளவேண்டாம் என நிதி ஆயோக் பரிந்துரை செய்ததாக தகவல்கள் பரவுகிறது. அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேற்காசிய போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல்-டீசல் சப்ளை, சமையல் கியாஸ் வினியோகத்திலும் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.. இதனால் விலைவாசி உயர்வு ஏற்படபொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனெனில் மேற்காசியாவில் போர் நடக்கும்போது, கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிரடியாக உயரும். சிமெண்ட், கம்பி மற்றும் இதர கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கான டீசல் விலை கூடும்போது, கட்டுமானச் செலவும் கிடுகிடுவென உயர்ந்து விடுகிறது. இதனால், “இவ்வளவு செலவு செய்து இப்போது எதற்கு கட்ட வேண்டும், நிறுத்தி வைக்கலாம்” என்ற தகவல்கள் பரவ தொடங்கி உள்ளது. இந்த சூழலில், கட்டுமான செலவு அதிகரித்திருப்பதால் டெல்லியில் உள்ள மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சக அலுவலகங்களை கொண்ட நிர்மன் பவன், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சக அலுவலகங்களை உள்ளடக்கிய உத்யோக் பவன், மத்திய கல்வி மற்றும் சட்ட அமைச்சக அலுவலகங்களை கொண்ட சாஸ்திரி பவன் கட்டிடங்களின் கட்டுமான பணிகள் உட்பட முக்கியமான எந்தவித கட்டுமான பணிகளையும் இந்தியாவில் இன்னும் 2 ஆண்டுகளுக்கு செய்யவேண்டாம் என்று நிதி ஆயோக் அறிவுறுத்தியிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்கியது.மக்கள் ஏற்கனவே விலைவாசி உயர்வால் அச்சத்தில் இருக்கும்போது, இது போன்ற செய்திகள் வந்தவுடன் அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் மற்றவர்களுக்குப் பகிரத் தொடங்குகின்றனர். இது போன்ற ‘பார்வேர்டு’ செய்திகள்தான் வதந்திக்கு உயிர் கொடுத்து மக்களை பீதிக்குள்ளாக்குகின்றன.
இதையடுத்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம்.. மத்திய அரசு அல்லது நிதி ஆயோக் அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை. கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு போலிச் செய்தி என்று விளக்கம் அளித்துள்ளது.

















