Home செய்திகள் தேசிய செய்திகள் 2.07 கோடி வாக்காளர்கள் நீக்கம்: ராகுல் கண்டனம்

2.07 கோடி வாக்காளர்கள் நீக்கம்: ராகுல் கண்டனம்

புதுதில்லி, செப். 2- மகாராஷ்டிராவில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 2.07 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தேர்தல் ஆணையத்தையும் பாஜகவையும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், பாஜகவும், தான் ‘வாக்குத் திருட்டு ஆணையம்’ எனக் குறிப்பிட்ட தேர்தல் ஆணையமும் தங்களது உத்திகளை தொடர்ந்து மாற்றி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். எப்படியாவது பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதும், இந்திய ஜனநாயகம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுமே அவர்களின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் 2024 மக்களவைத் தேர்தலுக்கும் அதே ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடையே 39 லட்சம் புதிய வாக்காளர்கள் திடீரென சேர்க்கப்பட்டதாகவும், அப்போதே இதை வாக்குத் திருட்டு என தான் கூறியதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது நீக்கப்பட்ட பெயர்களில் 91 சதவீதம், மேல்முறையீடுகளுக்குப் பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் 2.07 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்றும், இது ஐந்து வாக்காளர்களில் ஒருவரின் பெயர் விடுபட்டதற்கு சமம் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். 2024 மக்களவைத் தேர்தலின்போது மகாராஷ்டிராவில் 9.29 கோடி வாக்காளர்கள் இருந்ததாகவும், அதே ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த எண்ணிக்கை 9.70 கோடியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு வாக்காளர் எண்ணிக்கை 7.78 கோடியாக குறைந்துள்ள நிலையில், இவற்றில் எந்த வாக்காளர் பட்டியல் சரியானது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வாக்குத் திருட்டின் மூலம் அமைக்கப்பட்ட அரசாங்கத்தைப் பொறுத்தவரை மக்கள் ஒரு பொருட்டல்ல என்றும், அதனால்தான் பாஜக மக்களின் கருத்துக்கு செவி சாய்ப்பதில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.