Home செய்திகள் உலக செய்திகள் 28 ஆயிரம் அடி தாழ்ந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்

28 ஆயிரம் அடி தாழ்ந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்

லண்டன், அக். 6-
இங்கிலாந்தின் லண்டனில் இருந்து அமெரிக்காவின் சிகாகோ நகருக்குப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், அயர்லாந்து வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென 28 ஆயிரம் அடி கீழிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, விமானம் மீண்டும் லண்டனுக்குத் திருப்பி விடப்பட்டது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பிஏ295 என்ற விமானம், நேற்று லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து சிகாகோவுக்குப் புறப்பட்டது. போயிங் 777-200இஆர் ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், சிகாகோ ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைய 8 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும். அயர்லாந்து வான்வெளி மீது விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென 28 ஆயிரம் அடி கீழிறங்கி 9 ஆயிரம் அடி உயரத்துக்கு வந்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினர்.
கடந்த வாரம் துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃபிளைதுபாய் விமானத்தை மோதச் செய்ய முயற்சி நடந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த விமானம் திடீரென அதிக உயரத்திலிருந்து கீழிறங்கியது பயணிகளிடையே மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, விமானங்களில் பொதுவான அவசரநிலையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ‘ஸ்குவாக் 7700’ டிரான்ஸ்பான்டர் குறியீட்டு சமிக்ஞை விமானத்திலிருந்து அனுப்பப்பட்டது. ஆனால், அவசரநிலை அறிவிக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. பின்னர் விமானிகளுக்குக் கிடைத்த உத்தரவின் பேரில் விமானம் மீண்டும் இங்கிலாந்தை நோக்கித் திருப்பப்பட்டது. ஆங்கிலக் கால்வாய் மீது சில முறை வட்டமிட்ட விமானம், மீண்டும் லண்டனில் தரையிறங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயணிகள் நிம்மதியடைந்தனர். விமானத்தின் உயரம் திடீரெனக் குறைந்ததால் பயணிகளும் விமான ஊழியர்களும் சில நிமிடங்கள் திகிலில் உறைந்தனர்.