
நொய்டா, அக். 5- 43வது மாடியில் இருந்து குதித்து 28 வயதான சாப்ட்வேர் இஞ்சினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன அழுத்தம், குடும்ப பிரச்சனை, குழந்தையின் மருத்துவ செலவு மற்றும் கடன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.உலகில் எந்தவொரு பிரச்சினை ஏற்பட்டாலும் அதை நாம் சமாளித்துவிடலாம்.. டைம் இருந்தால் தீர்த்துவிடலாம். ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் சில நேரங்களில் சிலர் மோசமான முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் தான் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்துள்ளது. அங்குள்ள கட்டிடத்தின் 43வது மாடியில் இருந்து குதித்து 28 வயதான சாப்ட்வேர் இஞ்சினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் குருகிராமின் மானேசரில் வசித்து வந்த சம்பவ் ஜெயின் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அந்த கட்டிடத்தில் இருந்த ரூமில் தங்க புக் செய்திருந்த அவர், தனியாகவே ரூமிற்கு வந்துள்ளார். அப்போது தான் இந்த மோசமான முடிவை அவர் எடுத்திருக்கிறார். குழந்தை மருத்துவ செலவு சம்பவ் ஜெயின் 2024ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டதாகவும், 2025ஆம் ஆண்டு அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது மனைவி கர்ப்பமாக இருந்தபோது 7வது மாதத்திலேயே குழந்தை பிறந்ததால், நீண்ட கால மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதாக அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் கூறியுள்ளனர். குழந்தையின் சிகிச்சைக்காக இதுவரை சுமார் ரூ.40 லட்சம் செலவிடப்பட்டதாகவும், தொடர்ந்து லட்சக்கணக்கில் மருத்துவ செலவுகள் ஏற்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சம்பவ் கடுமையான நிதிச்சுமையை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது.














