
சென்னை: மே 7-
6 கேஸ் சிலிண்டர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு இலவசமாக வழங்கப்படும் என்ற தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் “அன்னபூரணி சூப்பர் 6” திட்ட அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. மாநிலத்தின் தற்போதைய நிதிச் சூழலில் இது எந்த அளவிற்கு சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்.சர்வதேச சூழல் மற்றும் தற்போதைய விலை நிலவரத்தை நோக்கினால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றங்கள் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே எரிவாயு விநியோகத்தில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.6 கேஸ் சிலிண்டர் திட்டம் சாத்தியமா இதன் நேரடி தாக்கம் வணிக சிலிண்டர் விலையில் எதிரொலிக்கிறது. மே 1 நிலவரப்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை 993 ரூபாய் அதிரடியாக உயர்த்தப்பட்டு, தற்போது 3,239 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வணிக ரீதியிலான இந்த விலை உயர்வு மறைமுகமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். இத்தகைய இக்கட்டான சூழலில்தான் விஜய்யின் இலவச சிலிண்டர் வாக்குறுதி கவனிக்கத்தக்க ஒன்றாக மாறுகிறது. ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்க வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் நிதி ஆதாரங்கள் மலைக்க வைக்கின்றன. இப்போதைய மதிப்பீட்டின்படி, இந்த திட்டத்தை செயல்படுத்த வருடத்துக்குச் சுமார் 12,408 கோடி ரூபாய் நிதி தேவைப்படும்.
இன்னொருபுறம் தமிழ்நாட்டின் நிதி நிலைமை சவாலான கட்டத்தில் உள்ளது. வரும் 2026-27 நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த கடன் சுமை சுமார் 11,00,000 கோடி ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பல்வேறு நலத்திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வளவு பெரிய தொகையை சிலிண்டர் மானியத்திற்காகத் திரட்டுவது விஜய்க்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
இப்போதைய பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டால், இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முடியாமல் தள்ளிப்போட வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம்.


















