
சென்னை, செப். 27-
தமிழகத்தில் 717 மதுக்கடைகள் மூடப்பட்டபோதிலும், மது விற்பனை குறையவில்லை. தற்போது தினமும் சராசரியாக 1 கோடி மது பாட்டில்கள் விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க, மதுபான ஆலைகளில் இருந்து மதுக்கடைகள் வழியாக விற்பனை செய்யப்படும் வரையிலான முழு நடைமுறையும் கடந்த ஆண்டு கணினி மயமாக்கப்பட்டது. இதன் கீழ், மதுக்கடைகளில் உள்ள கையடக்க கருவிகள் மூலம் ஒவ்வொரு மது பாட்டிலும் ஸ்கேன் செய்யப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மது விற்பனை குறித்த விவரங்களைத் துல்லியமாக அறிய முடிகிறது.கடந்த ஆண்டு தமிழகத்தில் 4,765 மதுக்கடைகள் செயல்பட்டன. அவற்றில் தினமும் சராசரியாக 93 லட்சம் பீர் மற்றும் மது பாட்டில்கள் விற்பனையாகின. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, முதல்வர் விஜய் உத்தரவின் பேரில், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்த 717 மதுக்கடைகள் கடந்த ஜூன் மாதம் மூடப்பட்டன. இதையடுத்து தற்போது 4,048 மதுக்கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், மது வகைகளின் விற்பனை குறையவில்லை. மாறாக, இந்தக் கடைகளில் தினசரி மது பாட்டில்களின் சராசரி விற்பனை 1 கோடியை எட்டியுள்ளது. வார விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை 1 கோடியையும் தாண்டுகிறது. ஒருவர் ஒரு மது பாட்டில் வாங்குகிறார் என்று கணக்கிட்டால், தமிழகத்தில் 1 கோடி பேர் மது அருந்துவோராக இருப்பது உறுதியாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, டாஸ்மாக் இணையதளத்தில் தங்களுக்கு விருப்பமான மது வகைகளைத் தேர்வு செய்து, அதற்கான தொகையை இணையவழியில் செலுத்தி, கடைகளில் பெற்றுக்கொள்ளும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இணையதளத்தில் விஸ்கி, பிராந்தி, ரம், வோட்கா, பீர், ஒயின், ஜின் உள்ளிட்ட மது வகைகளின் விவரங்களும், அவற்றின் விலைகளும் வெளியிடப்பட்டுள்ளன.















