
மாட்ரிட்: மார்ச் 4-
விளையாட்டு உலகின் மிக உயர்ந்த விருதான லாரஸ் விருதுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் சாதனை படைத்திருந்தது.
இதைத் தொடர்ந்து 2026-ம் ஆண்டுக்கான லாரஸ் விருதுக்கு ஆண்டின் சிறந்த அணிகள் பிரிவுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நேற்று நடைபெற்றது.
இதன் மூலம் சிறந்த அணிக்கான பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் மகளிர் கிரிக்கெட் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. இது இந்திய மகளிர் அணியின் செயல் திறனுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
சிறந்த அணிக்கான விருதுக்கு இந்திய மகளிர் அணியுடன் இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணி, ஐரோப்பிய ரைடர் கோப்பை அணி, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் கால்பந்து அணி, மெக்லாரன் பார்முலா 1 அணி ஆகியவற்றின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்த விருதின் வெற்றியாளர் வரும் ஏப்ரல் 20-ம் தேதி மாட்ரிட்டில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப் படுவார்கள்.


















