
அகமதாபாத், மார்ச் 10- இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா நாட்டின் பொக்கிஷம் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டி உள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையையும், சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையையும் இந்திய அணி படைத்தது. இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் (89), அபிஷேக் சர்மா (52), இஷான் கிஷன் (54) ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர். இவர்களது அதிரடியால் இந்திய அணி 255 ரன்களை குவித்திருந்தது. இதேபோன்று பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட அக்சர் படேல் 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: ஜஸ்பிரீத் பும்ரா, தலைமுறைக்கு ஒருமுறை உருவாகும் அபூர்வமான பந்துவீச்சாளர். அவரை நமது நாட்டின் பொக்கிஷம் என்று தான் கூற வேண்டும். தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். வெற்றி உணர்வில் இருந்து வெளியே வர எனக்கு சிறிது நேரம் ஆகும். ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இது ஒரு நீண்ட பயணம். 2024-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு தான் இது தொடங்கியது. ஜெய் ஷா, ரோஹித் சர்மா ஆகியோர் என்னை நம்பி, அணியை வழிநடத்த வாய்ப்பு கொடுத்தார்கள்.



















