
சென்னை: மார்ச் 28:
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் அண்ணா பல்கலைக் கழகப் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நேரடியாகச் சென்று புகார் ஒன்றை அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வருகிறேன். ‘எனது குடும்பம் ஏழ்மையானது. எனக்கு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி செய்து வரும் செங்கல்பட்டைச் சேர்ந்த ஞானவேல் பாபுவின் (50) அறிமுகம் ஒருவர் மூலம் கிடைத்தது.
படித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசை மற்றும் கனவு இருந்தது. ஆனால், போதிய வழிகாட்டல் இல்லை. இதை அறிந்த பேராசிரியர் ஞானவேல் பாபு எனக்கு உதவுவதாக நம்பிக்கை அளித்தார். பின்னர், அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க உதவி செய்தார்.கல்வி உதவித்தொகை பெற உதவினார். இதனால், அவர் மீது எனக்கு நன்மதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நாட்கள் செல்லச் செல்ல அவரது அணுகுமுறை மற்றும் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது.
எனது செல்போன் எண்ணுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டார். இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசத் தொடங்கினார். மேலும், ஆபாசமான வீடி யோக்கள் மற்றும் குறுஞ்செய்திகளையும் தொடர்ந்து அனுப்பினார்.
இதையடுத்து, நான் படிப்படியாக விலகினேன். நான் கண்டித்தும் கேட்காமல் 3 ஆண்டாக தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்தப் புகாரில் மாணவி தெரிவித்திருந்ததாக போலீஸார் கூறினர்.

















