
அகமதாபாத், ஏப்ரல் 18-
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். கொல்கத்தா அணிக்காக பந்துவீச்சில் வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே செய்து இருந்த ஒரு மைல்கல் சாதனையை வருண் சக்கரவர்த்தி செய்து இருக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக விளையாடி 100 விக்கெட்டுகளைக் கடந்த ஜாம்பவான்கள் பட்டியலில் வருண் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 25-வது லீக் போட்டியில், குஜராத் அணி பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 10-வது ஓவரை வருண் சக்கரவர்த்தி வீசினார். அந்த ஓவரின் ஒரு பந்தில் குஜராத் அணியின் நட்சத்திர பேட்டர் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக தனது 100-வது விக்கெட்டை அவர் பதிவு செய்தார். தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, தனது அபாரமான சுழற்பந்து வீச்சால் இந்த இமாலய இலக்கை எட்டியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்தவரை, இதுவரை வெளிநாட்டு வீரர்களான சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகிய இருவர் மட்டுமே 100 விக்கெட்டுகளைக் கடந்திருந்தனர். தற்போது அந்த வரிசையில் இணைந்த 3-வது வீரர் வருண் சக்கரவர்த்தி ஆவார். மேலும், அந்த அணிக்காக இந்தச் சாதனையைச் செய்த முதல் இந்திய வீரர் இவரே. இதுவரை 87 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள வருண், 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.





















